நிலவு
பெருவெடிப்பின்
தூசிகளை
ஓயாமல்
ஒளி உமிழும்
மெழுகு.
நிலவு
எல்லை யில்லா
அண்டம்
பனித்துச்
சொட்டிய
ஒற்றைத்
துளி.
நிலவு
பேரண்டத்தை
எட்டிப் பார்க்க
பூமி
விட்டெறிந்த
குட்டிச் சாளரம்.
நிலவு
ஆதி முதல்
மனிதன்
முகம் பார்த்துத்
தேயாத
காலக் கண்ணாடி.
நிலவு
பரிதி குடித்துப்
பருத்து
தீராமல்
ஒளி சுரக்கும்
ஒற்றை முலை.
நிலவு
புவியை விழுங்கிச்
செரிக்க
இருள் திறந்து வைத்த
வெளிச்ச
ஈருதடு.
தேடத் தேட
தேடாதது
கிடைக்கும்
அறையொன்று
மூடிக் கிடக்கிறது
ஒவ்வொரு வீட்டிலும்.
வெளிச்சத்தின் விரல்கள்
நீளாத நிழலுக்குள்
ஏதேனுமொன்று
கிடைத்துக் கொண்டே
இருக்கும்.
அறியாத கதைகளின்
உதிரிகள்
இறைந்திருக்கும்
அங்கிருந்துதான்
தேடத் தொடங்க
வேண்டும்
நம்மை.
உள்ளங்கைகள்
பேசும்.
உடல் வெப்பம்
துளிர் வியர்வை
பரிமாறும்.
நாடித் துடிப்புகள்
ஒத்திசைவாகும்.
ஓருடலின் நீட்சி
இன்னோருடல்
ஆகும்.
விரல்களின்
வனங்கள்
அடர்ந்து பூக்கும்.
இறுதிக் கணம்
வரை
கர்ப்பமாய்க் கனக்கும்.
இது வரை யாரும்
எழுதாத கவிதையை
எழுத விழைகிறேன்.
அதையும் யாரோ
எழுதி விட்டிருப்பார்கள்.
இதையும் கூட.