30 அக்., 2016

மழலை

வறள் மணலில் படியும்
பறவையின் சுவடாய்
மறைந்து விடுபவை
உன் மழலை நினைவுகள்.

உன் மழலையை  வரைய
ஓவிய மையாய்
விரல்களில் படியும் பனித்துளி கொடுக்கிறாய்.

உன்னைக் கவிதையில் எழுதக்
காகித மையாய்க்
காற்றினில் கரையும்
புன்னகை கொடுக்கிறாய்.

நீராடக் களையும் ஆடையைப் போல
உன் மழலையை என்னிடம்
கொடுத்து வைத்திருக்கிறாய்.

20 ஜன., 2016

மரணம்

வெளிச்சத்தில் நிழலாய்
இருளில் இருளாய்த்
தொடருகிறாய் நீ.

உறக்கத்தின் விழிப்பாய்
விழிப்பின் உறக்கமாய்
உறைகிறாய் நீ.

இமைத் துடிப்பின் இருளுக்குள்
தேனருந்திச் சிறகடித்துக்
கிடக்கிறாய் நீ.

பயணமாய்
ஊர்தியாய்
சேருமிடம்
எல்லாமாய் இருக்கிறாய் நீ.