23 டிச., 2014

அமுதினி

எல்லையின்றி நீளும்
நேர்கோட்டில் தேங்கும்
ஒற்றைப் புள்ளியாய்
உறைகின்றது இக்கணம்.

பொன் துகள்களாய் உதிரும் உன்
புன்னகை,
மென்பனியாய்ப் படிந்து படரும் உன்
சுவாசம்.

ஆழ்கடலின் உள்ளிருந்து எழுகின்ற குமிழ்களாய்
முகிழ்த்து மறையும் உன் குரலின்
அதிர்வுகள்.

உறைந்திருக்கும் புல்நுனியில்
மிளிர்கின்ற பனித்துளியாய்

அசைவற்ற நதிப்பரப்பில்
ஒளிர்கின்ற சிற்றலையாய்

ஒலியற்றப் பாலைவெளியில்
ஒலிக்கின்ற ஒற்றை மணலாய்

உயிர்த்து உறங்குகிறாய்
உறைந்த இக்கணத்தில்.

20 ஏப்., 2014

மரணங்கள்

வாழ்நாளின் சுவாசங்களெல்லாம்
ஒற்றைத் துளியாய் இறுகி
என் மேல் சொட்டும்
அக் கணப்  பொழுது

காட்சிப் புலமைனைத்தும்
பார்வைக்  குவியத்தில் திரண்டு
ஒற்றைக் கூர்கதிராய்
தாக்கும் அக் குறு நொடி

பேரலையாகும்  உயிர்ப்பின் மின்னலைகள்
நரம்பு ஊடகங்களை
அறுத்துத் தெறிக்கும்
உணர்வுப் பிரளயத்தின் பின்ன நொடி

எனத்  தன் மரணத்தின் ஒப்பற்ற வலியை
நினைவூட்டி நிகழ்ந்து விடுகின்றன
கையறு நிலையில்
கண்முன் மரணங்கள்.

15 ஜன., 2014

அலையும் இலையும்

கடலின் மேல் மிதக்கும்
இலை போல்
நம் வாழ்க்கை.

வீழும் மழைத்துளி
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.

தன்னியக்கம்
தொலைத்து
அலைகளில் கிழிபடும்
மென் னிலைதான்
நாம்.

நம் உயிர்ப்பின்
அசைவுகள்
நம்முடையதல்ல-

ஓயாது சுவாசிக்கும்
கடலின் மார்பின்
விம்மித் தணிதல்கள்.

நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-

கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.

எல்லைகளின்றி
ஆழ்ந்து
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.

அதில்
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.