2 அக்., 2012

நினைவின் நீள் விரல்கள்

சிறகுகள் இருந்தன அப்போது.

தன்னோடு தானே பேசிக்கொள்பவை
தப்பிப் போகாதிருக்க
அடைபட்டிருக்கும்
எப்போதும் கதவு.

நான்கு சுவர்கள்
ஒற்றைக்கூரை
இவற்றைச் சுமந்தபடி
பறக்கப் பழகும்
சிறைபட்ட மனது.

'இந்த உடல்
நீராலும், உணவாலும்
உயிர்த்திருப்பது அல்ல;
கனவால்
அதன் தண்ணென்ற அணைப்பால்
உயிர்த்திருப்பது'
என்று
எழுதி வைக்கப் பட்டிருக்கும்
கதவின் பின்புறம்.

கேட்டறிந்த
அவலங்களை
அழுது ஆற்றிக் கொள்ளும் 
ஒலியின் கசிவுகள்
வெளியேறாதிருக்க 
எப்போதும் இரையும்
மேசை மின்விசிறி.

பார்த்துணர்ந்த
அழுகைகள்,
ஆண் ஆதிக்கச் சூழுரைப்புகள்
மூடிய கதவின்
இடுக்குகள் வழியே
கூறிட்டு நுழைந்து
குத்திக் கிழிக்கும்.

அன்றுதான்
இயலாமை விரலிலிருந்து
வழியும் குருதி
காகிதத்தில் உறைய,
ஓசையின்றி விசும்பி  
மௌனமாய் வெடிக்கும்
கவிதையென்ற மொழி
கைவரப் பெற்றது.

கனவுகள் இருந்தன அப்போது.

நில்லாமல்  
விரையும் 
கடிகார முள்ளில்
காலூன்றி நிற்க.

சிறகுகள் உடைபட
வீழ்ந்திறக்கும்
பறவை போல்
ஆகாமல் இருக்க.

"கடந்த பாதைகளில்
புதைத்து வந்துள்ளேன்
கண்ணிவெடிகளை.
இனி மிகவும் அரிது
திரும்பிச் செல்வது",
ஒரு தோழி வரைந்தளித்த
ஓவியத்திலிருந்து 
சே குவேர
குறும் புன்னகையுடன்
உற்றுப் பார்ப்பான்.

அவை

யாரும் அறியாதவாறு 
வளர்த்த சிறகுகள்,

காகிதத்தில் அடைபட்டு
உயிர்த்த கனவுகள்,

கால முட்களின் மேல்
காலூன்றிய மணித்துளிகள்.

இப்போது
எங்கே போயின
இவை?

உடைந்த சிறகிலிருந்து
விடுபட்டு இவ்வுடல்
ஒற்றை இறகாக
எங்கோ
சுமந்து செல்லப் படுகிறது.

உறக்கத்தை
இறப்பிலிருந்து
மீட்டெடுத்த கனவுகள்
விழிப்புப் பொழுதுகளில்
மரித்துப் போகின்றன.

காற்றைப் போலக்
கடக்கும் காலத்தின்
இழப்புணராது
மரத்துப் போய்விட்டது
இந்த இருப்பு.

நினைவின் நீள் விரல்கள்
எட்டித் தொட இயலாத
இறந்தகாலம் ஒன்றில் 
புதைந்து விட்டது
அந்த உயிர்ப்பு.