15 டிச., 2012

வலியின் குருதி வழியும் உடல்கள்

உன் குருதி உண்டு 
தொடங்கிய வாழ்வு
நம் குருதி சொட்ட
அறுபட்டுப் போனது.

உன்னிலிருந்து
விடுபட்ட பின்பு 
உன் வலிகளின் பகிர்வும்   
நின்றே போனது.


நிறமின்றி வழிந்த
உன் விழி நீரில்
என்னுள் பாயும்
சிவப்பின் சாயல்.

முட்டி அழுது
தரையில் உகுத்த
உன் சிவப்பை நீர்க்கும்
என் நிறமில்லாக் குருதி.

என்னிலிருந்து
விடுபட்டு நின்று
உன்
வலிகளின் மூலத்தைத்
தேடுகின்றேன். 

உன்னில் கண்ட
நீர்மங்களின் சுரப்பு
வழியும் உடல்களில்
உன்னைக்
காணுகின்றேன்.

ஆணெனும் முத்திரை
அழித்து விட்டு
உன் யோனியின்
முத்திரை சுமக்கும்
என்னுடல்.


25 நவ., 2012

எனக்காகப் பெய்யாத மழை

உறங்கும் ஒலித் துகள்கள் 
எழுந்து சிதறும் படி 
வெளியில்
பெய்து கொண்டிருக்கிறது
மழை.

ஈரத் தறியில் நெய்த
ஆடை உடுத்திய படி
உறைந்து போன காற்று.

வானச் சில்லுகளை
ஏந்திப் பிடித்தபடி
படுத்துக் கிடக்கும் 
பூமி.

வெளிச்சத்  துளிகளை
உமிழ்ந்த அயர்ச்சியில்
இருண்டு
நலிந்த  
வானம்.

நீரிலைகள்  உதிர்த்து 
இலைத் துளிகளைச்
சுமக்கும்  
மரங்கள்.

உடுத்திய சிற்றோடைகள் 
ஒழுக நடக்கும் 
வேளாண் மகளிர்.

வண்ணங்கள் சிதறப்
பறக்கும்
பட்டாம்பூச்சிகள்.

உள்ளங்கால் தெறிக்க
விரையும்
சிறுவர்கள்.

என

இறுக மூடிய
கண்ணாடிக் குமிழினின்று
வெளி நீள முயலும்
என்
விரல்களுக்கு அகப் படாமல்
எப்போதும் போல
பெய்து முடிகின்றது 
எனக்காகப் பெய்யாத மழை.

2 அக்., 2012

நினைவின் நீள் விரல்கள்

சிறகுகள் இருந்தன அப்போது.

தன்னோடு தானே பேசிக்கொள்பவை
தப்பிப் போகாதிருக்க
அடைபட்டிருக்கும்
எப்போதும் கதவு.

நான்கு சுவர்கள்
ஒற்றைக்கூரை
இவற்றைச் சுமந்தபடி
பறக்கப் பழகும்
சிறைபட்ட மனது.

'இந்த உடல்
நீராலும், உணவாலும்
உயிர்த்திருப்பது அல்ல;
கனவால்
அதன் தண்ணென்ற அணைப்பால்
உயிர்த்திருப்பது'
என்று
எழுதி வைக்கப் பட்டிருக்கும்
கதவின் பின்புறம்.

கேட்டறிந்த
அவலங்களை
அழுது ஆற்றிக் கொள்ளும் 
ஒலியின் கசிவுகள்
வெளியேறாதிருக்க 
எப்போதும் இரையும்
மேசை மின்விசிறி.

பார்த்துணர்ந்த
அழுகைகள்,
ஆண் ஆதிக்கச் சூழுரைப்புகள்
மூடிய கதவின்
இடுக்குகள் வழியே
கூறிட்டு நுழைந்து
குத்திக் கிழிக்கும்.

அன்றுதான்
இயலாமை விரலிலிருந்து
வழியும் குருதி
காகிதத்தில் உறைய,
ஓசையின்றி விசும்பி  
மௌனமாய் வெடிக்கும்
கவிதையென்ற மொழி
கைவரப் பெற்றது.

கனவுகள் இருந்தன அப்போது.

நில்லாமல்  
விரையும் 
கடிகார முள்ளில்
காலூன்றி நிற்க.

சிறகுகள் உடைபட
வீழ்ந்திறக்கும்
பறவை போல்
ஆகாமல் இருக்க.

"கடந்த பாதைகளில்
புதைத்து வந்துள்ளேன்
கண்ணிவெடிகளை.
இனி மிகவும் அரிது
திரும்பிச் செல்வது",
ஒரு தோழி வரைந்தளித்த
ஓவியத்திலிருந்து 
சே குவேர
குறும் புன்னகையுடன்
உற்றுப் பார்ப்பான்.

அவை

யாரும் அறியாதவாறு 
வளர்த்த சிறகுகள்,

காகிதத்தில் அடைபட்டு
உயிர்த்த கனவுகள்,

கால முட்களின் மேல்
காலூன்றிய மணித்துளிகள்.

இப்போது
எங்கே போயின
இவை?

உடைந்த சிறகிலிருந்து
விடுபட்டு இவ்வுடல்
ஒற்றை இறகாக
எங்கோ
சுமந்து செல்லப் படுகிறது.

உறக்கத்தை
இறப்பிலிருந்து
மீட்டெடுத்த கனவுகள்
விழிப்புப் பொழுதுகளில்
மரித்துப் போகின்றன.

காற்றைப் போலக்
கடக்கும் காலத்தின்
இழப்புணராது
மரத்துப் போய்விட்டது
இந்த இருப்பு.

நினைவின் நீள் விரல்கள்
எட்டித் தொட இயலாத
இறந்தகாலம் ஒன்றில் 
புதைந்து விட்டது
அந்த உயிர்ப்பு.

22 ஆக., 2012

கற்கள்

அவன்  
தரையில் வேரூன்றி
நின்று கொண்டிருந்தான்.

ஓடும் மனிதர்கள் பலர்
ஓரக்கண்ணில் பார்த்து
இகழ்ச்சிப் புன்னகை பூத்து
மீண்டும் விரைந்தனர்.

பின்னர் 
அவனை நோக்கிக்
கற்கள் எறியப் பட்டன.

அப்போதும்
அவன்
அங்கேயேதான்
அசையாமல் நின்று கொண்டிருந்தான்.
கல்வீச்சும் தொடர்ந்தது.

சிறிது காலத்துக்குப் பின்
அவன் நின்றிருந்த இடம்
சிறு குன்றாகி இருந்தது.
அது
அவனை நோக்கி வீசப் பட்ட
கற்களால் ஆகியிருந்தது.
வீசிய கற்கள்
தொட முயன்றுத்
தோற்றுத் தோற்று
அவன் அடியில் தேங்கின.

இப்போது
அவன் நின்றிருக்கும் இடம்
பெரும் மலையாகி இருக்கிறது.

கற்கள் வீசுபவர்கள்
அவன் உயரம் பார்த்து
மலைத்துப் போகிறார்கள்.

அவர்கள் வீசும்
ஒவ்வொரு கல்லுக்கும்
அவனது உயரம்
கூடிக்கொண்டேதான் இருக்கிறது.

19 ஆக., 2012

விரல்களின் வனம்

யாசகம் கேட்டுக்
கைகளை ஏந்துகிறேன்.

ஏந்திய
உள்ளங்கையில்
விழுகின்றன
விரல்கள்.

ரத்தம் வற்றி  உறைந்து
விறைத்த விரல்கள்.

ரத்தச் செம்மை காணாது
வெளிறிய விரல்கள்.

ரத்தக்  கசிவில் ரேகைகள்
அழிந்த விரல்கள்.

ரத்தச் செழிப்பில் மின்னும்
மோதிர விரல்கள்

என
விழுந்து கொண்டிருக்கின்றன
இன்னும் இன்னும் விரல்கள்.

வீழும் விரல்களைத்
தின்று
என் விரல்கள் செழிக்க

ஏந்திய
உள்ளங்கையில்
வளர்கின்றது
ஒரு விரல்களின் வனம்.







ஏழ்மையின் மொழி

ஏழ்மையின் மொழி
எளிமையானது.

அது 
ஆடைகள் அற்றது.
அணிகள் அற்றது.
ஒலிகள் அற்றது-
கற்றுக் கொள்ளச்
சிக்கல்கள் அற்றது.

ஏழ்மையின் மொழி
காலங்கள் கடந்து
நிலங்கள் கடந்து
எளிதில் புரிவது.
இலக்கணத் 
திரிபுகள் அற்றது.

மிதித்துச் சென்றாலும்
பாதங்களை நெருடாத
நடை பாதைக் குழந்தையின் புன்னகைகள் போல-

ஏழ்மையின் மொழி
மிகவும் எளிமையானது.

11 ஆக., 2012

இவ்வாழ்க்கை

காற்று சுமக்கும் 
சிற்றிலை போலவோ

நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ  

ஆனதிந்த வாழ்க்கை.

ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்

வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய் 

மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.

காற்றின் தொடுதலும் 
நதியின் அணைப்பும்

இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.

அறுபடலும்
விடுபடலும்    
விடுதலை என்று

எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.  
 

  


 

5 ஆக., 2012

ஊனம்

ஊனப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது
மரம்.

ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்  
புதுக் கிளையும்
வளர்க்கும் அது.

                               மரத்திற்கு உன்னை விட
                               ஐந்தறிவு குறைவு-
                               உறுப்பிழந்தால் புதிது வளர்.

                               உனக்கு மரத்தை விட
                               ஐந்தறிவு அதிகம்-
                               வெட்டும் கரங்களை வெட்டு.  
 

4 ஆக., 2012

காலம்

விரையும் புகைவண்டிக்குக்
கையசைக்கும்
குழந்தை போலத்தான்
நாமும்
ஓடும் காலத்தின் முன்னே.

நமதுக் கையசைவை
அலட்சிய உடலசைவால்
புறக்கணித்தபடி
விரைந்து ஓடும் அது,
கரும்புகை கக்கி
கருவிழி மறைத்து.   

கட்டற்று நீண்டு
தடையற்றுப் பாயும் அதன்
பரிமாணத்தின் முன்னே
ஒற்றைப் புள்ளியாய்
ஒடுங்கி மறைவோம்
நாம்.

மழைக்கால இரவுகள்

உடல் சுற்றிய போர்வையாய் 
குளிரீரம் படர,

ஈரம் உள்நுழைந்து
மாயக் கட்டுகளை 
அவிழ்த்து விட,

முளை ஒன்று 
வெளி ஓட்டை உள்ளிருந்து
செல்லமாய் முட்டுகிற    
குறுகுறுப்பை ரசித்திருக்கும்
ஈர மண் புதைத்த விதையாக  

உணர்கிறேன் என்னை 

மழைக்கால இரவுகளில்.


   

3 ஆக., 2012

தவம்

சொந்தமாய் சிலுவை சும.
தூண்டுதலின்றி முட்கிரீடம் தரி.
உன்னை நீயே
சிலுவையில் அறைந்து கொள்.

தினம் தினம் உயிர்த்தெழு. 




  

வேர்கள்

மரங்கள் தங்கள்
இலைகளையும்
செடிகள் தங்கள்
மலர்களையும்
உதிர்த்துப் பழகியவை.

எனினும்

மரங்களும்
அச்செடிகளும்
என்றும் தங்கள்
வேர்களை உதிர்த்துப் பழகியதில்லை.

கற்சிலைகள்

தீபத்தின் வெளிச்ச இருட்டில்

தன்னைத்தானே
கண்டுணர  இயலாத
இக் கற்சிலைகள்

வழிபட்டுச் செல்கின்ற
மனித முகங்களில் 
தன் முகம்
தேடுகின்றன.

2 ஆக., 2012

முலைகள்

பல்லாண்டுகால
அடிமைச் சிறையில் இருந்து
விடுபட்ட மகிழ்ச்சியில்
துள்ளுகின்றன
வெள்ளைச்சேலைக் கிழவியின்
முலைகள்.
 

16 ஜூலை, 2012

நதியின் பாதம் இடரும் கூழாங்கற்களின் மொழி பேசி வருவாய் நீ

நதியின்  பாதம் இடரும்
கூழாங்கற்களின்  மொழி பேசி
வருவாய் நீ எனக்
காத்துக் கிடக்கிறேன்.

எங்கிருந்தோ
காற்று சுமந்து வரும்
சிற்றிலையாய்
என்னை நீ அடைவாய் என
எதிர் நோக்கிக் இருக்கிறேன்.

எங்கோ எவரோ உதிர்த்த
புன்னகை நீ
என
நான் அறிவேன்.
உன்னைச்  சுமந்து வந்து
என்னிதழில் பொருத்துகின்ற 
காற்று வரும் வழி பார்த்துக்
காத்துக் கிடக்கிறேன்.

ஓசையற்ற இரவுகளில்
சுவரெங்கும் எதிரொலிக்கும்
என் 
உள்மனப் புலம்பல்களில், 
ஓய்வற்றப் பகல்களிலும்
அகல மறுத்துப்
பின் தொடரும்
என் 
அடிமனத்தின் நிழல்களில்

உன்னை
இன்னும்
தேடிக் கொண்டே  இருக்கிறேன்.

இரவுக் கல்லறையிலிருந்து
நான்  உயிர்த்தெழும் 
காலைகளில்
வெளிச்ச விழிகளுக்கஞ்சி
நான் சரண் புகும்
இருள் இரவுகளில் 

என் இருப்பின் காரணத்தை
எனக்குணர்த்த 
வருவாய் எனக்
காத்துக் கிடக்கிறேன்.

பொருள் இல்லாதப்
பைத்தியத்தின் கூக்குரலாய்
ஒலிக்கும் என் கவிதைகளின்
அர்த்தங்களை மொழி பெயர்க்க 

நதியின்  பாதம் இடரும்
கூழாங்கற்களின்  மொழி பேசி
வருவாய் நீ என

ஏங்கித் ததும்பும்
என் தாய்மையோடு
இன்னும் 
காத்துத்தான்  கிடக்கிறேன்.












.