11 ஆக., 2013

காலத்தின் இன்னொரு பரிமாணம்

 
     ஓடிக்கொண்டிருக்கும் நம்மோடு இணையாக ஓடும் ஒன்றை நாம் உணர்ந்து கொள்வது மிகவும் கடினம். காலம்... ஓடிக்கொண்டே இருக்கும் நம்மோடு தானும் ஓடிக்கொண்டே இருக்கிறது. நம் ஓட்டத்தை நிறுத்தி சில நொடிகள் உள்ளாய்வு செய்யும் போதுதான் அதன் இருப்பை நாம் உணர முடிகின்றது.

    காலம் பற்றிய புரிதல் முழுமையாக ஏற்படும் அந்த வரையறுப்புத் தருணம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு காலப் பகுதியில் நிகழ்கிறது. ஒரு சிலருக்கு இளமையில் , இன்னும்  சிலருக்கு முதுமையில், மற்றும் சிலருக்கு இறப்புக்கு முன்பு உணர்விருக்கும் கடைசி மணித் துளியில்.

    மனிதத்தைக் கெடுக்கும் கல்வி, தன்னுணர்வைச் சீரழிக்கும் குடும்ப மற்றும் சமுதாயக் கட்டமைப்புகளுக்குள் சிறைப் பட்ட படி காற்றாய்க்  கடக்கும் காலத்தை உற்றறிதல் மிகவும் அரிது. மந்தித்த நமது உணர்வு வெளியில் காலத்தின் பரிமாணம் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்ட நொடி முள்ளின் நோண்டியோட்டத்தால் வரையறுக்கப் படுகிறது. கால வரையறைக்குள் எழுதி முடிக்க வேண்டிய தேர்வுகள் , கூடடைவதைத்  தாமதப் படுத்தும் போக்குவரத்துக்குச் சைகை விளக்கு, குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப் பட வேண்டிய பணி  இலக்கு... இப்படி காலத்துடனான நமது உரையாடல்கள் ஒற்றைப் பரிமாணம் கொண்டமைந்து விடுகின்றன.

    ஓசைகள் உறங்கும் ஓர்  இருட்  பொழுதில் அல்லது ஒற்றையோசை கேட்கும் கடலடியில் வெளிப்புற இழுவிசைகளுக்கு அப்பாற்  பட்டு நமது உள்ளிருந்து கேட்கும் மன ஓசைகளை உற்றுக் கேட்கும் கவனம் கை கூடிய ஒரு பொழுதில் நம் மனப் புலனில்  இது வரை வெளிப்பட்டிராத காலத்தின் மற்றுமொருப் பரிமாணம் துலக்கமுறத் தொடங்கும். குழந்தை தடுமாறிச் சிதற்றும் மழலை மொழிகள், புகைப் படத்தில் உறைந்திருக்கும் கல்லூரி நினைவுத் துணுக்குகள்... இவை காலப் பயணத்தில் நாம் இது வரைக் கடந்து வந்தத் தொலைவினை நமக்கு நினைவு படுத்தும்.

     பாலைவனப்  பயணத்தில் எடுத்துச் செல்லப்படும் குவளை நீர் போன்றதுதான் இந்தக் காலம். அருந்தினாலும் அருந்தா விட்டாலும் தீர்ந்து போய் விடும் அது.உறக்கத்திலும்  உறக்கங்களுக்கு இடைப் பட்ட பொழுதுகளிலும் காலத்தை நாம் பல முறை முறை கேடு செய்கின்றோம். பொழுதைப் போக்குவது குறித்து ஆலோசிப்பது போல அதனை ஆக்குவது குறித்து நாம் ஆலோசனை செய்வது இல்லை. நேரத்தைக் கொல்லுவது எப்படியென்றுத் தெரியாமல் பலமுறை வருத்தப்  படுகிறோம்.

    உண்மையில் நாம் விரயமாக்கும் ஒவ்வொரு நொடியும் இறந்த உடல்போலக் கனப்பவை. காலத்தின் இறந்த உடலங்களைச் சுமந்தபடி நாம் இன்னும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம். சுமக்கும் நமது ஆற்றலைக்  காலத்தின் கனம் முறியடிக்கும் பொழுது முதுமை எய்துகிறோம். நாம் கொல்லும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்மை நாமே கொன்றுதான் கொள்கிறோம்.

10 ஆக., 2013

கனலினி

உன்னுடல் ஓடையை
என்விரல்கள் அளையும் போது
நீயெப்படி உணர்கிறாயோ
நானுமதை  உணர்கின்றேன்.

என் முகம் காணாது
அழுதோயும் உன்னைப் போல்
நீயில்லாப் பொழுதுகளில்
நானேங்கி  ஓய்கின்றேன்.

உறக்கத்தில் நீ விழிக்க 
அலையும் உன் கண்கள் போல்
உறக்கத்திலும் உனைத்தேடி
அலையும் என்  கைகள்.
மதிப்பில்லாப் பொருள்களையும் 
பொக்கிசமாய் நீ  காப்பாய்.
பொருளின்றி நீ பேசும்
சொற்களையும்  காப்பேன்  நான்.

என்னுடையத் தாலாட்டில்
நீயுறங்கிப் போகும் முன்
உன்னுடையத் தாலாட்டில்
உறங்கிப் போவேன் நான்.

இப்படி
என்னை நீயாக்கும்
அந்த 
உன்னத மந்திரத்தை
எந்த விரலிடுக்கில்
ஒளித்து வைத்துள்ளாய் நீ ?


7 ஏப்., 2013

ஆலங்கட்டி மழை

எங்கேயோ விழுந்து
வெடிக்கிறது
இடி.

உறுப்புகள் தெறித்து
திசையெங்கும் பறக்க
எழும்
கடைசிக் கேவலாய்
வீறிட்டழுகிறது
காற்று.

மின்சாரம் செத்து விழ
பிணமாய் அழுத்துகிறது
இருட்டு.

தொண்டையில் சிக்கிய
உணவுக் கவளம்
தெறித்துச் சிதற
அலருகின்றன
குழந்தைகள்.

கூரையின் பிளவு வழி
விழுகின்றது
மின்னல்.

உயிரோலம் எழுப்பும்
பிள்ளைகளை
அடிவயிற்றில் பொதித்த படி
மேல் கவிழ்கிறார்
அம்மா.

விமான இறக்கைகளாய்
காற்றைக் கிழித்தவாறு
வெளிச்சக் குண்டுகளைப்
பொழிந்து கொண்டு
உணர்ச்சியற்றுப் பெய்கிறது

அந்நிய தேசத்து 
ஆலங்கட்டி மழை.