வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜன., 2016

மரணம்

வெளிச்சத்தில் நிழலாய்
இருளில் இருளாய்த்
தொடருகிறாய் நீ.

உறக்கத்தின் விழிப்பாய்
விழிப்பின் உறக்கமாய்
உறைகிறாய் நீ.

இமைத் துடிப்பின் இருளுக்குள்
தேனருந்திச் சிறகடித்துக்
கிடக்கிறாய் நீ.

பயணமாய்
ஊர்தியாய்
சேருமிடம்
எல்லாமாய் இருக்கிறாய் நீ.

22 நவ., 2015

மரணம்

பார்த்துக் கொண்டிருக்கும் போதே
கைகளிலிருந்து நழுவி
தலைகுப்புறத்
தரையில் வீழும்
சிறு குழந்தையைப் போலத்தான்
நம் மரணமும்.

25 மே, 2015

மழைத்துளி வீழ்ந்த கடல்

கடலில் வீழும் மழைத்துளி போன்றவை
குழந்தைகள்.

மழைத்துளி வீழ்ந்த கடல்கள் போன்றவர்
நாம்.

22 மார்., 2015

ஊனம்

ஊனமாக்கப் படுதலை
ஏற்றுக் கொள்கிறது மரம் .

ஊனத்தின் வலியை
விழுங்கி விட்டுப்
புதுக் கிளையும் வளர்க்கிறது .

        மரத்திற்கு உன்னை விட
        ஐந்தறிவு குறைவு-
       உறுப்பிழந்தால் புதிது வளர்.

       மரத்தை விட உனக்கு
       ஐந்தறிவு அதிகம் -
       வெட்டும் கரங்களை வெட்டு.

20 ஏப்., 2014

மரணங்கள்

வாழ்நாளின் சுவாசங்களெல்லாம்
ஒற்றைத் துளியாய் இறுகி
என் மேல் சொட்டும்
அக் கணப்  பொழுது

காட்சிப் புலமைனைத்தும்
பார்வைக்  குவியத்தில் திரண்டு
ஒற்றைக் கூர்கதிராய்
தாக்கும் அக் குறு நொடி

பேரலையாகும்  உயிர்ப்பின் மின்னலைகள்
நரம்பு ஊடகங்களை
அறுத்துத் தெறிக்கும்
உணர்வுப் பிரளயத்தின் பின்ன நொடி

எனத்  தன் மரணத்தின் ஒப்பற்ற வலியை
நினைவூட்டி நிகழ்ந்து விடுகின்றன
கையறு நிலையில்
கண்முன் மரணங்கள்.

15 ஜன., 2014

அலையும் இலையும்

கடலின் மேல் மிதக்கும்
இலை போல்
நம் வாழ்க்கை.

வீழும் மழைத்துளி
முத்தென உள்ளுறையா
வெற்று இலைதான்
நாம்.

தன்னியக்கம்
தொலைத்து
அலைகளில் கிழிபடும்
மென் னிலைதான்
நாம்.

நம் உயிர்ப்பின்
அசைவுகள்
நம்முடையதல்ல-

ஓயாது சுவாசிக்கும்
கடலின் மார்பின்
விம்மித் தணிதல்கள்.

நம் உயிரினைக் குழைத்து
வார்த்த வனைவுகள்
நிலைப்பவையல்ல-

கடலலையின் வன்கரம்
வரைந்து அழிக்கும்
கரைமணல் ஓவியங்கள்.

எல்லைகளின்றி
ஆழ்ந்து
அகன்று
உயிர்த்துக் கிடக்கின்றது
கடல்.

அதில்
அறிவும் அற்று
உணர்வும் அற்று
செத்து மிதக்கிறோம்
நாம்.

 
      
       
      

10 ஆக., 2013

கனலினி

உன்னுடல் ஓடையை
என்விரல்கள் அளையும் போது
நீயெப்படி உணர்கிறாயோ
நானுமதை  உணர்கின்றேன்.

என் முகம் காணாது
அழுதோயும் உன்னைப் போல்
நீயில்லாப் பொழுதுகளில்
நானேங்கி  ஓய்கின்றேன்.

உறக்கத்தில் நீ விழிக்க 
அலையும் உன் கண்கள் போல்
உறக்கத்திலும் உனைத்தேடி
அலையும் என்  கைகள்.
மதிப்பில்லாப் பொருள்களையும் 
பொக்கிசமாய் நீ  காப்பாய்.
பொருளின்றி நீ பேசும்
சொற்களையும்  காப்பேன்  நான்.

என்னுடையத் தாலாட்டில்
நீயுறங்கிப் போகும் முன்
உன்னுடையத் தாலாட்டில்
நான் உறங்கிப் போவேன்.

இப்படி
என்னை நீயாக்கும்
அந்த 
உன்னத மந்திரத்தை
எந்த விரலிடுக்கில்
ஒளித்து வைத்துள்ளாய் நீ ?


15 டிச., 2012

வலியின் குருதி வழியும் உடல்கள்

உன் குருதி உண்டு 
தொடங்கிய வாழ்வு
நம் குருதி சொட்ட
அறுபட்டுப் போனது.

உன்னிலிருந்து
விடுபட்ட பின்பு 
உன் வலிகளின் பகிர்வும்   
நின்றே போனது.


நிறமின்றி வழிந்த
உன் விழி நீரில்
என்னுள் பாயும்
சிவப்பின் சாயல்.

முட்டி அழுது
தரையில் உகுத்த
உன் சிவப்பை நீர்க்கும்
என் நிறமில்லாக் குருதி.

என்னிலிருந்து
விடுபட்டு நின்று
உன்
வலிகளின் மூலத்தைத்
தேடுகின்றேன். 

உன்னில் கண்ட
நீர்மங்களின் சுரப்பு
வழியும் உடல்களில்
உன்னைக்
காணுகின்றேன்.

ஆணெனும் முத்திரை
அழித்து விட்டு
உன் யோனியின்
முத்திரை சுமக்கும்
என்னுடல்.


25 நவ., 2012

எனக்காகப் பெய்யாத மழை

உறங்கும் ஒலித் துகள்கள் 
எழுந்து சிதறும் படி 
வெளியில்
பெய்து கொண்டிருக்கிறது
மழை.

ஈரத் தறியில் நெய்த
ஆடை உடுத்திய படி
உறைந்து போன காற்று.

வானச் சில்லுகளை
ஏந்திப் பிடித்தபடி
படுத்துக் கிடக்கும் 
பூமி.

வெளிச்சத்  துளிகளை
உமிழ்ந்த அயர்ச்சியில்
இருண்டு
நலிந்த  
வானம்.

நீரிலைகள்  உதிர்த்து 
இலைத் துளிகளைச்
சுமக்கும்  
மரங்கள்.

உடுத்திய சிற்றோடைகள் 
ஒழுக நடக்கும் 
வேளாண் மகளிர்.

வண்ணங்கள் சிதறப்
பறக்கும்
பட்டாம்பூச்சிகள்.

உள்ளங்கால் தெறிக்க
விரையும்
சிறுவர்கள்.

என

இறுக மூடிய
கண்ணாடிக் குமிழினின்று
வெளி நீள முயலும்
என்
விரல்களுக்கு அகப் படாமல்
எப்போதும் போல
பெய்து முடிகின்றது 
எனக்காகப் பெய்யாத மழை.

19 ஆக., 2012

விரல்களின் வனம்

யாசகம் கேட்டுக்
கைகளை ஏந்துகிறேன்.

ஏந்திய
உள்ளங்கையில்
விழுகின்றன
விரல்கள்.

ரத்தம் வற்றி  உறைந்து
விறைத்த விரல்கள்.

ரத்தச் செம்மை காணாது
வெளிறிய விரல்கள்.

ரத்தக்  கசிவில் ரேகைகள்
அழிந்த விரல்கள்.

ரத்தச் செழிப்பில் மின்னும்
மோதிர விரல்கள்

என
விழுந்து கொண்டிருக்கின்றன
இன்னும் இன்னும் விரல்கள்.

வீழும் விரல்களைத்
தின்று
என் விரல்கள் செழிக்க

ஏந்திய
உள்ளங்கையில்
வளர்கின்றது
ஒரு விரல்களின் வனம்.







ஏழ்மையின் மொழி

ஏழ்மையின் மொழி
எளிமையானது.

அது 
ஆடைகள் அற்றது.
அணிகள் அற்றது.
ஒலிகள் அற்றது-
கற்றுக் கொள்ளச்
சிக்கல்கள் அற்றது.

ஏழ்மையின் மொழி
காலங்கள் கடந்து
நிலங்கள் கடந்து
எளிதில் புரிவது.
இலக்கணத் 
திரிபுகள் அற்றது.

மிதித்துச் சென்றாலும்
பாதங்களை நெருடாத
நடை பாதைக் குழந்தையின் புன்னகைகள் போல-

ஏழ்மையின் மொழி
மிகவும் எளிமையானது.

11 ஆக., 2012

இவ்வாழ்க்கை

காற்று சுமக்கும் 
சிற்றிலை போலவோ

நதியில் இழுபடும்
மரக்கிளை போலவோ  

ஆனதிந்த வாழ்க்கை.

ஆதியிலிருந்து அறுபட்ட
பட்டமாய்

வேரினிலிருந்து விடுபட்ட
கொடியாய் 

மூலம் தொலைத்து
நலியும் இவ்வாழ்க்கை.

காற்றின் தொடுதலும் 
நதியின் அணைப்பும்

இன்பமென நம்பித்
தொலையும்
இவ்வாழ்க்கை.

அறுபடலும்
விடுபடலும்    
விடுதலை என்று

எண்ணி மயங்கி
ஏமாறும்
இவ்வாழ்க்கை.