24 செப்., 2021

எனக்கும் 

என் தொடு திரைக்கும் 

இடையே

பட்டாம்பூச்சி ஒன்று

கடந்து போனது. 


வர்ணம் பாரித்த

விரல் நுனியைத்தான்

வருடிக் கொண்டிருக்கிறேன்

இப்போது. 

30 ஆக., 2021

உறக்கம்

 இரவின் உறக்கம்

கரைந்து

ஒற்றைத் துளியாய்ச்

சொட்டியதை

பரிதி குடித்துப் போனது. 

வறியப் புல் நுனி நான்.

காலம்

 காலம் என்னும் பெரும் கிளை

கைகளின் வளைப்பில்

தாழ்ந்து சொரிந்து 

மீண்ட பின்

நான் மட்டும்

நின்று கொண்டிருக்கிறேன்

பூக்களின் இடையே.

30 ஜூன், 2021

சேகரிப்பு


ஒவ்வொரு நாளும்

எனைச் சுற்றிலும்

வழிந்து உருகிப்

பின் இறுகியிருக்கும்

இருளின்

ஏதோவொரு மூலையில்

ஒளிந்து கொண்டிருக்கிறது

என் உறக்கம்.

இருள்

தலையணையாய்

முகம் கவிழ்ந்து

பின் பாறையென அழுத்துகிறது.


பின்

பாறை சிதைந்து

சிறு மணற்றுகள்களாய் உதிர

எனைச் சுற்றிக் குவிகிறது

சமாதி மண்.


பாம்புப் பயணம்


 காலமும்

அதன் முதுகேறிய

வாழ்க்கையும்


ஓசையின்றி

தடயமின்றி


மின்னும் நேரத்தில்

வளைந்து நெகிழ்ந்து

அகன்று குறுகி


எதிர்பாரா ஓர் கணத்தில்

தீண்டி விட்டு

பின்

மறைந்தும் விடுகிறது

பாம்பைப் போல.

20 ஜூன், 2021

இழப்பு


காற்றில் அலைந்த

ஏதிலி விதையொன்று

காட்டில் விழுந்தது.


விரலாய் நீளும்

வேர்களின் தேடலில்

நீரைக் கண்டது

தோழமை கொண்டது.


ஓர் நாள் சூரியன்

வேரடி நீரைத்

திருடிய பொழுது

கிளைக் கரங்கள் உயர்த்தி

முறையிட்டு அழுதது.

இலை உதடுகள் 

உதிர

அழுது ஓய்ந்தது.


நீரைத் தேடி 

வேரும் நீண்டது

வேரின் நீட்சியில் 

மரமாய் உயர்ந்தது.


காலம் சென்றது.


சூரியன் திருடிய 

வேரடி நீரை

அது

தேடிச் சலித்தது.


காற்றில் அலைவுறும் 

இலைகளின் உளறலில்

பூக்களின் நிறமாய்

வழியும் குருதியில்

வலியை மாய்த்தது. 


ஓர் நாள்

உதிர இருந்த 

இலையின் மேலே

பனித்துளி ஒன்று 

வந்து விழுந்தது.


அது

சூரியன் திருடிய

வேரடி நீரெனத்

தொடுதலில் உணர்ந்து


ஒரு துளி நீரில்

வேர் வரை நனைய

இலைகள் கூட 

இதழ்களாய்ப் பூக்க

மரம் கேட்டது

" இத்தனைக் காலம்

எங்கே இருந்தாய்? "


பனித்துளி சொன்னது

" உன் வேரடி நீராய்

இருந்த நான்

சூரியன் பருகிக்

காற்றினில் கரைந்தேன்.


உன் மூச்சில் இருந்தேன்

அலைவுறும் இலைகளின்

பேச்சாய் இருந்தேன்.


மழையாய் வீழ்ந்தேன்

ஈரப்பதமாய் 

வேர்வழி நுழைந்தேன்.


உன் பூக்களின் நிறமாய்

உன் துளிர்களின் உயிர்ப்பாய்

கூடவே இருந்தேன்.


நீ இழப்பது எதுவும்

அகலுதல் இல்லை.


வேர்களின் நீட்சியில்

வானேக நீளும்

கிளைகளின் வளர்ச்சியில்

கூடவே இருந்தேன்.


காற்றில் அலைவுறும்

மெல்லிய செடியை

புயலைத் தாங்கும்

மரமெனச் செய்தேன்.


உரமாய் உள்ளேன்.


என் 

உருவம் மாறலாம்


வேரடி நீராய்

இருந்த நான்


காற்றாகிப் போகலாம்

மழையாய் வீழலாம்

பனித்துளி ஆகலாம்


ஆனால்

உன்னை எப்போதும் 

அகலுவது இல்லை

என்று சொன்னது.


காலைப் பரிதி

கரங்கள் நீட்ட

 மீண்டும்

 மறைந்தது. 



18 ஜூன், 2021

அரையாயுட் காலம்

காட்டாற்றில் இழுபடும்
ஓடம் போல
மிதப்பின் இன்பத்தில்
இம்மனம் மயங்கும்.
கையறு நிலையில்
பின்னோக்கித் தொலையும்
வெளியினைக் கண்டு
தினமும் உழலும்.

விழிப்பறிவுறுத்த அறையும் நொடிகள்
கடிகார முள்ளாய்க் காலொடிந்து வீழும்.

காற்றினில் புரளும் உதிரிலை போலக்
கிளர்வுற்று அடங்குதல்
உயிர்ப்பென எண்ணி
அம்மணம் கொண்டு அலைவுறும்
இம்மனம்.

ஏகுதல் இன்றி ஊன்றுதல் இன்றி
அந்தரத்தில் மிதக்கும்
குப்பையைப் போலத்
திரிந்து திரிந்து ஓயும்
இம்மனம்.

வாழ்தலும் இன்றிச் சாதலும் இன்றி
சிறுகச் சிறுகத்
தன்னுள் தானே
அழிவுறும் காலம்
இதுதான்

அரையாயுட் காலம்.