காற்றில் அலைந்த
ஏதிலி விதையொன்று
காட்டில் விழுந்தது.
விரலாய் நீளும்
வேர்களின் தேடலில்
நீரைக் கண்டது
தோழமை கொண்டது.
ஓர் நாள் சூரியன்
வேரடி நீரைத்
திருடிய பொழுது
கிளைக் கரங்கள் உயர்த்தி
முறையிட்டு அழுதது.
இலை உதடுகள்
உதிர
அழுது ஓய்ந்தது.
நீரைத் தேடி
வேரும் நீண்டது
வேரின் நீட்சியில்
மரமாய் உயர்ந்தது.
காலம் சென்றது.
சூரியன் திருடிய
வேரடி நீரை
அது
தேடிச் சலித்தது.
காற்றில் அலைவுறும்
இலைகளின் உளறலில்
பூக்களின் நிறமாய்
வழியும் குருதியில்
வலியை மாய்த்தது.
ஓர் நாள்
உதிர இருந்த
இலையின் மேலே
பனித்துளி ஒன்று
வந்து விழுந்தது.
அது
சூரியன் திருடிய
வேரடி நீரெனத்
தொடுதலில் உணர்ந்து
ஒரு துளி நீரில்
வேர் வரை நனைய
இலைகள் கூட
இதழ்களாய்ப் பூக்க
மரம் கேட்டது
" இத்தனைக் காலம்
எங்கே இருந்தாய்? "
பனித்துளி சொன்னது
" உன் வேரடி நீராய்
இருந்த நான்
சூரியன் பருகிக்
காற்றினில் கரைந்தேன்.
உன் மூச்சில் இருந்தேன்
அலைவுறும் இலைகளின்
பேச்சாய் இருந்தேன்.
மழையாய் வீழ்ந்தேன்
ஈரப்பதமாய்
வேர்வழி நுழைந்தேன்.
உன் பூக்களின் நிறமாய்
உன் துளிர்களின் உயிர்ப்பாய்
கூடவே இருந்தேன்.
நீ இழப்பது எதுவும்
அகலுதல் இல்லை.
வேர்களின் நீட்சியில்
வானேக நீளும்
கிளைகளின் வளர்ச்சியில்
கூடவே இருந்தேன்.
காற்றில் அலைவுறும்
மெல்லிய செடியை
புயலைத் தாங்கும்
மரமெனச் செய்தேன்.
உரமாய் உள்ளேன்.
என்
உருவம் மாறலாம்
வேரடி நீராய்
இருந்த நான்
காற்றாகிப் போகலாம்
மழையாய் வீழலாம்
பனித்துளி ஆகலாம்
ஆனால்
உன்னை எப்போதும்
அகலுவது இல்லை
என்று சொன்னது.
காலைப் பரிதி
கரங்கள் நீட்ட
மீண்டும்
மறைந்தது.
Arumai
பதிலளிநீக்குஉண்மையில் சிறப்பான கவிதை
பதிலளிநீக்கு