28 மார்., 2009

நிழலைச் சிதைக்கும் வெளிச்சம்

நிழல் போலத் தொடர்கிறது
இந்தத் தனிமை.

வெளிச்சப் பொழுதுகளில்
என் உள்ளிருந்து
தெறித்து வெளி விழுந்து
பின்
மீண்டும் உட்கலக்கத்
தவிப்புடன் பின் தொடரும்.

இருள் பொழுதில் மட்டும்
என்னோடு  உட்கலந்து
உணர்வின்  மொழியில்
எண்ணமே சொற்களாகப் 
பேசிக் களித்திருக்கும்
இத்  தனிமை .

தனிமையின் உடனிருப்பில்
நான் செழிக்கும்
இப்பொழுதுகளை
சிதைத்து அழிக்க
வன் கரங்கள் வீசியபடி
வரும் இந்த
வெளிச்சம்.

பின்  இந்த
வெளிச்சப் பொழுதுகளில் 
ஆடை பறிக்கப் பட்ட
நிர்வாணத்தின் கூச்சத்துடன்,
பின் தொடரும் நிழலின்
இருட்டு அணைப்பிற்குள்
பதுங்க முயன்று முயன்றுத்
தோற்று
ஒளிவேன்  நான்.






27 மார்., 2009

தனிமை நதி

நதி
போன்றதுதான்
இந்தத் தனிமை.

கோர்த்துக் கொள்ள
நட்புடன்
மரங்கள் நீட்டிய
பலக்கோடி வேர் விரல்களை
மறுதலித்துப் பாயும்
இந்தத் தனிமை நதி.

எல்லைகள் இல்லாதக் கடலின்
உள்ளோடு உள்ளாக
தனிமை துறந்து உட்கலக்கும்
நதி போன்றதுதான்
இந்தத் தனிமை.