15 டிச., 2012

வலியின் குருதி வழியும் உடல்கள்

உன் குருதி உண்டு 
தொடங்கிய வாழ்வு
நம் குருதி சொட்ட
அறுபட்டுப் போனது.

உன்னிலிருந்து
விடுபட்ட பின்பு 
உன் வலிகளின் பகிர்வும்   
நின்றே போனது.


நிறமின்றி வழிந்த
உன் விழி நீரில்
என்னுள் பாயும்
சிவப்பின் சாயல்.

முட்டி அழுது
தரையில் உகுத்த
உன் சிவப்பை நீர்க்கும்
என் நிறமில்லாக் குருதி.

என்னிலிருந்து
விடுபட்டு நின்று
உன்
வலிகளின் மூலத்தைத்
தேடுகின்றேன். 

உன்னில் கண்ட
நீர்மங்களின் சுரப்பு
வழியும் உடல்களில்
உன்னைக்
காணுகின்றேன்.

ஆணெனும் முத்திரை
அழித்து விட்டு
உன் யோனியின்
முத்திரை சுமக்கும்
என்னுடல்.


1 கருத்து:

  1. உணர்வின் அறிவு,
    அறிவின் உணர்வு,
    உணர்வின் பகிர்வு,
    அறிவின் சோர்வு,
    நடுங்குது நெஞ்சம்,
    நன்மையை உணர்ந்து,
    சொல்லாலும் முடியாது,
    சொன்னாலும் முடியாது,
    சொல்லச் சொல்ல முடிவேது?
    கருப்பைக் கசிவு,
    வலியின் உச்சம்,
    கனிவின் பெருக்கல்,
    கழிவின் மறதி,
    வலியின் இன்பம் - தன்
    உணர்வின் மரணம்...

    (உங்கள் கவிதையின் பாதிப்பால் வந்த வினை!)

    பதிலளிநீக்கு